வீட்டுல காய் இல்லாத நேரத்துல வெறும் அப்பளம் வெச்சு இப்படி குழம்பு செய்யுங்க.. ருசி சும்மா அள்ளும்! - KITCHEN OLBNமதிய வேளையில் வீட்டில் சமைக்க காய்கறிகள் எதுவும் இல்லையா? வெளியே சென்று காய்கறி வாங்கி வந்து சமைக்க சோம்பேறித்தனமாக இருக்குதா? உங்கள் வீட்டில் அப்பளம் உள்ளதா? அப்படியானால் அந்த அப்பளத்தைக் கொண்டு அட்டகாசமான சுவையில் குழம்பு செய்யுங்கள்.
இந்த அப்பள குழம்பு சாதத்துடன் சேர்த்து நெய் ஊற்றி சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு 15 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் ஈஸியாகவும் இருக்கும். அதோடு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:• நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
• கடுகு - 1 டீஸ்பூன்
• வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
• சின்ன வெங்காயம் - 10-12 (நறுக்கியது)
• கறிவேப்பிலை - 1 கொத்து
• பூண்டு - 10 பல் (நறுக்கியது)
• தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
• உப்பு - 1 டீஸ்பூன்
• மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
• மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
• மல்லித் தூள் - 3 1/2 டீஸ்பூன்
• சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
• மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
• தண்ணீர் - 1 கப்
• புளி - சிறிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
• தேங்காய் பால் - 1/2 கப்
• வெல்லம் - 1/2 டீஸ்பூன்
• அப்பளம்
• கொத்தமல்லி - சிறிது
செய்முறை: முதலில் அப்பளத்தைப் பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் புளியை நீரில் ஊற வைத்து, அதையும் சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
பின் அதில் தக்காளியை சேர்த்து, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
பின் அதில் 1 கப் நீரை ஊற்றி 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பின்பு அதில் புளிச்சாறு மற்றும் தேங்காய் பால் சேர்த்து, 5-6 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பின் அதில் வெல்லத்தை சேர்த்து கிளறி 1 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி விட வேண்டும்.
இறுதியாக அப்பளத்தை நொறுக்கி குழம்புடன் சேர்த்து கிளறி, 2 நிமிடம் ஊற வைத்தால், சுவையான அப்பள குழம்பு தயார்.
🫕
@KitchenOLBN